சர்வதேச மகளிர் தினம்: ‘சம உரிமையும் சம வாய்ப்பும், அனைவருக்கும்’

தொகுப்பு: வாசுகி சிவகுமார்

ண்டாண்டு காலமாகப் பெண்கள் தினம் வந்து போகின்றது. அவ்வாறு மார்ச் 8ஆம் திகதி மற்றுமொரு பெண்கள் தினம் கொண்டாடப்படவிருக்கின்றது. சம உரிமையும் சம வாய்ப்பும், அனைவருக்கும் என்பதாக இம்முறை சர்வதேச மகளிர் தினத்தொனிப் பொருள் அமைந்திருக்கிறது.

மகளிர் தினம் சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்பட ஆரம்பித்து நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் பற்றிச் சிந்திப்பது அவசியம். மகளிர் தினங்கள், பெண் விடுதலைப் போராட்டங்கள், பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் எல்லாம் இரண்டாம் தரப் பிரஜையாகக் கருதப்பட்டுவந்த பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

வாக்குரிமை, பெண் கல்வி, வேலை வாய்ப்பு என்பனவெல்லாம் பெண் விடுதலைப் போராட்டங்கள் பெற்றுத் தந்தவையே. ஆனாலும் இன்று பெண் மீதான அடக்குமுறைகள் வேறு வடிவம் பெற்றுள்ளன. ஆனால் பொதுவான பார்வையில் பெண்களின் கல்வி மறுக்கப்படுவதில்லை. பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலைபார்க்கிறார்கள், உயர் பதவிகள் வகிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன குறை போன்றதொரு தோற்றப்பாடே நிலவுகின்றது. இதுபற்றி, சமூகத்தில் வெவ்வேறு மட்டத்திலுள்ள பெண்களிடம் வினவினோம்.

“பெண்தான் எதிரி” – நெய் ரஹீம் சஹீட், (கலைஞர், அறிவிப்பாளர்)

பெண்ணுக்கு சமமாக வாய்ப்புகள் அளிக்கப் ப்படுவதாக என்றைக்குமே சொல்ல முடியாது. தனக்கு முன்னுள்ள தடையைத் தகர்த்தெறிந்து பெண் முன்னேறுவதற்கு ஒரு பெரிய யுத்தமே செய்ய வேண்டியிருக்கிறது.

கலைத்துறையில் அது இன்னமும் அதிகமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் கலைத்துறையில் ஈடுபடுவதற்கு பொதுவாகவே நிறைய எதிர்ப்பிருக்கிறது. அதிலும் நான் மலே இனத்தைச் சேர்ந்தவள். எனவே என்னை முஸ்லிமாகவும் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்ப் பெண்ணாகவும் எவரும் அங்கீகாரம் தருவதில்லை.

கலைத்துறையில் ஈடுபாடு காட்டும் பெண்ணைப் பற்றிய தப்பான எண்ணப்பாங்கே எமது சமூகத்தில் நிலவுகின்றது. ஒரு சிலர் அவ்வாறிருக்கலாம். அதற்காக ஊடகத்துறையில் ஈடுபடும் பெண்கள் எல்லோருமே தவறானவர்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

எங்கள் வீட்டில் எவருமே கலைத்துறையில் ஈடுபாடு காட்டவில்லை. நான் கலைத்துறையில் ஈடுபாடு காட்டுவது குறித்து எனது தந்தைக்கு எந்தவித மனத் தடையும் இருக்கவில்லை. மாறாக அவரே என்னை ஊக்குவித்தவர்.

ஆனால் அம்மா கடுமையாக எதிர்த்தார். இங்கு இன்னொரு பெண்ணால் தான் எனக்கு தடையேற்பட்டது. கால ஓட்டத்தில் எமது சமூகத்தில் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனது தாயாரிடத்திலும் அது மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“களத்தில் சென்று செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்கள் தயாராக இல்லை” – துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை, (ஊடகவியலாளர்)

இலங்கை யின் சனத் தொகையில்52 சதவீதமான வர்கள் பெண் கள். அதேநேரம் பதிவு செய்யப் பட்ட வாக்காளர் களில் 56 சத விகிதத்தினர் பெண்களாக இருக்கின்றனர். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 11 பேர் மாத்திரமே பெண்கள். இது 6 சதவீதத்திலும் குறைவாக இருக்கின்றது. உலகின் முதல் பெண் பிரதமரைத்தந்த நாடு. பெண் ஜனாதிபதியாகக் கூட பதவிவகிக்க முடிந்திருக்கிறது என்றெல்லாம் பெருமை பேசினாலும் கூட, அரசியலில் பெண்ணின் பங்களிப்பு மிகக் குறைந்தளவிலேயே இருக்கின்றது. இது மாகாண மட்டங்களில் மிகவும் குறைவாக இருக்கின்றது. ஊடகத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள், ஆங்கில மொழி ஊடகத்தில் உயர் பதவிகளைப் பெண்கள் வகித்திருக்கிறார்கள், வகிக்கிறார்கள் ஆனால் தமிழில் இன்னமும் நிலைமை மாறவில்லை. ஊடகத்துறையில் உயர் பதவி வகிக்கும் எத்தனை பெண்களை உங்களால் குறிப்பிட இயலும்?

பெண் ஊடகவியலாளர்களாக இருப்பவர்களும் முழு வீச்சுடனும் செயற்படுகின்றார்களா என்பது கேள்விக்குறிதான். வெளிநாட்டு ஊடகங்களில், எந்தவொரு நிகழ்வாக இருப்பினும் களத்துக்குசென்று செய்தி சேகரிப்பவர்கள், அனேகம் பெண்கள்தான். ஆனால் இங்கு எமது தமிழ்ப் பெண் பத்திரிகையாளர்களு க்கு பல பிரச்சினைகள். இங்குள்ள நிலைமைகள், பெண்ணுக்கான பாதுகாப்பு என்பன அவர்கள் அவ்வாறு களத்துக்குச் சென்று செயற்படுவதைத் தடுக்கலாம்.

இந்நிலைமை மாறவேண்டும். ஊடகத்துறைக்கு வரும் தமிழ் பேசும் பெண்களும் இதுவும் ஏனைய வேலைகளைப் போல, 8.30 இலிருந்து 4.30 வரையோ, 9 மணி முதல் 5 மணிவரையோ மேசையில் உட்கார்ந்து செய்தி சேகரித்து, எழுதினால் போதும் என்று நினைக்கிறார்கள். களத்தில் குதிக்கத் தயங்குகிறார்கள். இதற்கு சமூக, குடும்ப, நாட்டுப் பின்னணிக ளும் காரணங்களாக இருக்கலாம்.

இந் நிலைமை பொறியியல், மருத்துவத் துறைகளிலும் நீடிக்கின்றது. எவ்வாறு இந்நிலைமையை மாற்றுவதும் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலைதான் இருக்கின்றது.

இருந்தாலும் இளம் பெண் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இத்துறைக்கு வரும் இளம் பெண் பத்திரிகையாளர்களை வினைத்திறன்மிக்கவர்களாக்கலாம்.

பெண்ணின் உணர்வுக்குரிய உரிமை கிடைக்க வேண்டும்
கமலா, (உளவள ஆலோசகர்)

பெண்களை உறவுக்காகத்தான் ஆண்கள் நாடுகின்றார்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. பெண்களின் உணர்வுகள் வித்தியாசமானவை. ஆண்களின் உணர்வுகளிலிருந்து வேறுபட்டவை. ஆண், பெண் இருபாலாரின் உணர்வுகளும் வேறுபட்டவை. இதை இரு சாராரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்ப உறவுகள் சிறப்பானதாக அமையும். கருவைச் சுமந்து அதனைப் பேணும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எனவே அவளது உணர்வுகளும் தனித்துவமானதும் வித்தியாசமான துமாக அமைந்திருக்கும். பொதுவாகப் பக்குவம் உள்ள possitivலீ ஆன ஆண்களாலேயே பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகின்றது. பெண்ணின் உணர்வுக்குரிய உரிமை கிடைக்க வேண்டும்.

வாழ்க்கை மிகவும் அழகானது. அதில் ஒருவருடன் ஒருவர் பேசாமல், அல்லது எந்நேரமும் சிடுசிடுப்பாக, எரிந்து விழுந்து கொண்டிராமல் உறவுக்குள் ஒவ்வொருவரினதும் உரிமைகள் மதிக்கப்படுகின்றபோது அது அழகானதாக மாறிவிடுகின்றது.

“இருப்பது இருக்கிற மாதிரியே இருந்துவிட்டுப் போகட்டும் என்பது தவறு ” கே. கலை அரசி, (ஆசிரியை, புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி)

தொழில் ரீதியாக எடுத்துக்கொண் டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கிடையாது. பெண்கள் தமது பதவி வழி அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஆண்கள் இடையூறு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அதேசமயம் முந்தைய தலைமுறையை விட இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு அதிக சுதந்திரமும் உள்ளது.

பெற்றோர்கள் எந்தக் கிலேசமும் இன்றி பெண்களை படிக்க வைக்கிறார்கள். உயர் கல்விக்கு, விசேட கற்கைகளுக்கு அனுமதிக்கிறார்கள்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆண்கள் தொடர்ந்து படிக்க விரும்பினாலும் குடும்பப்பளு, வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் என்பன காரணமாக ஆண்கள் படிப்பைத் தொடர்வதில் பிரச்சினைகள் உள்ளன. பெண்களுக்கு இது குறைவு.

எனினும் பெண்கள் வேலைத் தளங்களில் இருந்து வீடு திரும்பியதும் பழைய நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

வீடுகளில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்ய வேண்டும். வீடுகளில், குடும்ப அமைப்பில், கலாசாரத்தில் பெண் அடிமைத்தனம் வரத்தான் செய்கிறது. இங்கே அப் பெண்ணின் பதவி, சம்பளம் எல்லாம் பொருட்டல்ல.

95 சதவீதம் இப்படித்தான் குடும்பக் கட்டமைப்பு, ஆணுக்குத்தான் முதலிடம் என்கிறது.

வீட்டில் பெரியோர் இருந்தால் அவர்களுக்கு பணிவிடை செய்தல், தவறுகள் ஏற்படும் பட்சத்தில் வாங்கிக் கட்டிக்கொள்ளல், கணவனிடம் பிரச்சினை ஏற்படும்போது அப்பெண்ணின் மேல் குற்றம் சாட்டுதல் எனப் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. மேலும் எவ்வளவுதான் பெண் படித்தவளாக உத்தியோகம் பார்ப்பவளாக இருந்தாலும் கணவன், அவள் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும் தனக்காக பணிவிடைசெய்பவளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இதற்கு ஆணின் ‘ஈகோ’தான் காரணம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவதற்கு அவன் விரும்புவதில்லை.

மனைவியானவள் அவள் எவ்வளவு பெரியவளாக வெளியுலகில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எனக்கு அவள் அடங்கித்தான் போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா ஆண்களிடமும் இருக்கிறது. ஏனெனில் இது தந்தை வழிச் சமுதாயம்.

இது இப்படி இருக்க நமது பெண்களும் இருப்பது இருக்கிற மாதிரியே இருந்துவிட்டுப் போகட்டும் என எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவதும் மாற்றங்கள் நிகழாமைக்குக் காரணம் என்று சொல்வேன்.

ஆனால் கடந்த தலைமுறையை விட இந்தத் தலைமுறை ஆண்கள் பெண்களை அதிகம் புரிந்துவைத்திருப்பதாக நான் கருதுகிறேன்.

காலையில் எழுந்து சமையலுக்கு உதவுவது, பிள்ளைகளை பாடசாலைக்கு தயார் பண்ணுவது, கடைக்கு சென்று வருவது என கணவன்மார் ஒத்தாசையாக இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம். அதாவது மாற்றங்கள் நிகழ்ந்து ஆண்களிடம் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இன்று சீரியல், சினிமா என டி. வியில் போடுகிறார்கள். பெண்கள் அவற்றைப் பார்க்கும்போது அவற்றில் மூழ்கி விடுகிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்கள் விட்டுக்கொடுப்போடு தமது வேலைகளைத் தாமே செய்து கொள்வதைப் பார்க்கிறோம். டி.வி.யும் கூட ஆண்களின் ஆதிக்கத்தில் தளர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே வெளிச் சமூக வாழ்க்கையில் பெண்களுக்கு போதிய சுதந்திரம் இருந்தாலும், குடும்பம், கலாசாரம், சமூகச் சூழல் என்று வரும்போது தளர்வுகள் ஏற்பட்டுள்ள போதிலும் பெண்கள் பிரச்சினைகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கத்தான் செய்கிறார்கள். விதவைகளை எடுத்துக்கொண்டாலும் அவர்களை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மையில் பெருமளவு தளர்வு ஏற்பட்டுள்ளது. விதவை மறுமணத்தை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் எனினும் சமயம் சார்ந்த கலாசாரத்தில் விதவை தொடர்பான நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

“பின்னால் இருந்து உழைப்பவள் பெண்ணானாலும் பெருமை ஆணையே சென்றடைகிறது”, ரூபினி வரதலிங்கம் (மேலதிக அரச அதிபர், யாழ். கச்சேரி)

நீங்கள் கூறுவதைப் போல பெண்கள் இன்று அதிக அளவில் வெளியே சென்று வேலை செய்து வருகிறார்கள். பெரும் பதவிகள் வகிக்கிறார்கள். எனவே தொழில் செய்யும் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை மற்றும் ஆண்களின் பார்வையில் தற்போது பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னர் பெண்கள் நிர்வாகம் செய்வதற்கு தகுதியற்றவர்கள், தனித்து இயங்க முடியாதவர்கள், தலைமைத்துவத்துக்கான தகுதியற்றவர்கள் என்ற கருத்து நமது சமூகத்தில் இருந்தது. உயரதிகாரிகளும் இப்படித்தான் நினைத்தார்கள். எனவே, தமக்குக் கீழ் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் அவர்கள் விரும்பவில்லை. இவளால் என்ன ஆகப் போகிறது என்ற அலட்சியம்.

இன்று இந்த நிலை இல்லை. கல்வி, அனுபவம், திறமை என்பனவற்றுக்கு மரியாதை தருகிறார்கள்.

தொழில் செய்யும் பெண்களுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. மாவட்டச் செயலக அதிகாரி என்ற அளவில் நான் பல களப் பணிகளுக்கு சென்று வருகிறேன். பெண் உத்தியோகத்தர்கள் எனும்போது பெண்கள் முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பெண்ணிடம் சொன்னால் பரிவுடன் கேட்பாள்; காரியம் நடக்கும் என ஆண்களும் நினைக்கிறார்கள்.

இந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் குடும்பம், சமூகம், கலாசாரம் என்று வரும்போது நிலைமைகள் மாறி விடுகின்றன. ஒரு பெண் தன் வாழ்க்கையில் உத்தியோகத்தராக மட்டும் இருந்துவிட முடியாது. மனைவியாக, அன்னையாக, வீட்டுத் தலைவியாக, வரவேற்பாளராக, சமையல்காரியாக பல பொறுப்புகளை அவள் ஏற்க வேண்டியிருக்கிறது. ஆணுக்கு வேலை முடிந்து வீடு வந்ததோடு பொறுப்பு முடிந்துவிடுகிறது. பெண் என்ற வகையில் இப்பொறுப்புகளை வகிக்கத்தான் வேண்டும். ஆனால் இது உனது பொறுப்பு. என்னுடையதல்ல’ என்று ஆண்கள் கைவிட்டு விடுவதும் கணவர்மார் கூட்டுப் பொறுப்பு வகிக்கத் தயங்குவதும் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதற்கு அப்பால், மத நிகழ்ச்சிகள், சடங்கு சம்பிரதாயங்கள் என வரும்போது அங்கே குடும்ப மற்றும் சமூக ரீதியாக ஆணுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவற்றில் எல்லாம் பின்நின்று உழைப்பவளாக பெண் இருந்தாலும் கெளரவமும் முன்நிலைப்படுத்துதலும் ஆணுக்கே போய்ச் சேர்கிறது. பெண் எவ்வளவு பெரிய பதவியை வகித்தாலும், குடும்பமும், சுற்றமும் பெண் என்ற வகையில் தன் கடமைகளைச் செய்தேயாக வேண்டும் என எதிர்பார்க்கிறது. பெண் வாழும் வீட்டில் வயதானவர்கள் இருப்பின் அவளது கடமை மேலும் அதிகரிப்பதோடு பிரச்சினைகளையும் சந்திக்க நேர்கிறது.

பெண்ணின் உத்தியோகமும், கல்வித் தகைமையும் ஆணுக்கு பொருட்டல்ல.

சொல்வதைச் செய் என்ற மனப்பான்மை ஆண்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களைவிட ஆண் உடல் வலு கூடியவனாக இருப்பதாலும், சமூக அங்கீகாரம் பெற்றவனாகத் திகழ்வதாலும் அவனுக்குக் கீழ் இருந்து கொள்வது பல பிரச்சினைகளைத் தீர்த்து விடுகிறது என்பதால் பல பெண்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விடுகிறார்கள்.

எமது சமூகக் கட்டமைப்பு அவ்வாறானது.

இன்று வடக்கு கிழக்கில் விதவைகள் பிரச்சினை பரந்த அளவில் காணப்படுகிறது. இப் பெண்களின் எதிர்காலத்தையும் அவர்களின் குடும்ப நலன்களையும் முன்னிட்டு விதவைத் திருமணத்தை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும். மண விலக்கை பொறுத்தவரையில் பிரச்சினைக்கு விவாகரத்துதான் தீர்வு என்பதை நான் ஏற்கவில்லை. அது கடைசி தீர்வாகத்தான் இருக்க வேண்டும்.

“இறுக்கமான கலாசார நடைமுறைகளால் பெண்ணின் சுதந்திர நடமாட்டத்துக்கு தடை” ரஜனி (கலாசார உத்தியோகத்தர் நல்லூர்)

முன்னைய காலங்களை விட இப்போது பெண்களின் நிலையில் நிறையவே முன்னேற்றமி ருக்கிறது.

பெண் கல்வி கற்கும் வீதம், வேலை பார்க்கும் வீதம் எல்லாம் அதிகரித்துவருகிறது.

முன்னரெல்லாம் பிரதேச மட்டங்களில் ஒன்றாகவோ இரண்டாகவோ இருந்த பெண்களின் எண்ணிக்கை இன்று கணிசமான அளவு அதிகரித்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் இறுக்கமான பாரம்பரிய கலாசார விழுமியங்களால் பெண்கள் தமது தொழிலைத் திறன்படச் செய்வதில் சிக்கல்கள் எழுகின்றன.

பெண்கள் ஆணுக்குச் சமமாக வேலை பார்த்தாலும், ஆணைப்போலவே வெளியே, களத்தில் சென்று பணியாற்ற பெண்ணால் முடியாது என்ற கருத்து பரவலாக அனேகரிடம் இருக்கின்றது.

மேலதிகமாக பயணிக்கும்போதெல்லாம் வெளியே சென்று பணியாற்றப் பெண்ணால் முடிவதில்லை என்று உயரதிகாரிகளும் நினைப்பதால் அவ்வாறான பதவிகள் அனேகமாக ஆண்களுக்கே போய்ச் சேருகின்றன. இந்த ஒரு குறையைத் தவிர ஏனைய பதவிகளில் ஆணுக்கு நிகராகப் பெண்பணியாற்றுகிறாள்.

இப்போது யாழ்ப்பாணத்தில் உதவி அரசாங்க அதிபராகக் கூட ஒரு பெண்தான் பதவி வகிக்கின்றார்.

“பெண் முன்னேறிச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை”
டாக்டர் அருந்ததி பொன்னுசாமி (மிருக வைத்தியர்)

முன்னரைப் போல அல்லாமல் பெண்கள் படித்து முன்னேறு கிறார்கள், உண்மை. ஆண்டாண்டு காலமாக கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் இப்போது தமக்கு வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் தம்மை நிலைநாட்டிக் கொள்கிறார்கள், முன்னேறுகிறார்கள் என்று பாராட்டுவதை விடுத்து காழ்ப்புணர்ச்சியே எமது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது.

எனது துறையை எடுத்துக் கொண்டீர்களானால் சில விஷயங்கள் பெண்களால் இயலாதவை என்றே முத்திரை குத்தி ஓரங்கட்டிவிடுவார்கள்.

இதற்கு முதல் ஒரு பெண் மருத்துவர் கடந்த 20 ஆண்டு காலமாக கடமையாற்றி வருகிறார். நோய்வாய்ப்பட்ட விலங்குகளைத் தன்னந்தனியே பராமரித்திருக்கிறார். அவற்றுக்கு நோயேற்பட்ட தருணங்களில் வெற்றிகரமாகக் குணமாக்கியிருக்கின்றார்.

அவரால் தன்னை நிரூபிக்க முடிந்ததால்தான் அதற்குப் பின்னரும் பெண்களே எமது நிறுவனத்தில் மிருக வைத்தியர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால் பெண்களால், மிகவும் பெரிய விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது என்றதொரு கருத்து முன்வைக்கப்பட்டு தற்போது ஒரு ஆண் மருத்துவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உடற் கூற்றியல் ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு உண்மைதான்.

ஆனால், அது மிருக வைத்தியராக ஒரு பெண் தன் கடமையை ஆற்றுவதற்கு எவ்விதத்திலும் தடையாக அமையாது. இதற்கு முன்னர் ஒரேயொரு பெண் மருத்துவரால் இங்கிருந்த விலங்குகளையெல்லாம் சிறப்பாகக் கவனிக்க முடிந்திருக்கிறது.

பெண்கள் தனியே சில சாதனைகளைச் செய்ய முனையும் போது அதைத் தடுக்க ஏதோவொரு காரணத்தைத் தேடிப்பிடித்து பெண் மீது தடைபோட இச்சமூகம் முயல்கின்றது. அவ்வாறுதான் என்னால் இதனைப் பார்க்க முடிகின்றது.

நோய் வாய்ப்படும் எல்லா நோயாளிகளையும் ஒரு மருத்துவரால் பிழைக்க வைக்க முடியாது. அவ்வாறு தான் விலங்குகளுக்கும், வீட்டிலும் பெண்ணின் நிலை அதுதான். கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால்க் கூட இன்னமும் வீட்டில் பெண்தான் சமைக்க வேண்டும். பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும். உணவூட்ட வேண்டும்.

பெரும்பான்மை இனத்தவர்களிடம், மனைவியின் கடமைகளில் பங்குகொள்கிறார்கள், சமையலில், குடும்பப் பராமரிப்பில் மனைவிக்கு உதவும் தன்மை அதிகரித்திருக்கிறது. ஆனால் தமிழ் சமூகம் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது.

இரவில் அவசரமாக வெளியே செல்லவேண்டுமானால் கூட, பெண்களால் முடிவதில்லை.

அநேக பிரச்சினைகளுக்குக் காரணம், ஆண்கள் திறந்த மனத்துடன் பேச முன்வராமைதான். -நன்றி: தினகரன்-

One Comment

  1. l.kalpana says:

    Respected madem.im read u r artical.very nice and very useful to the womens.thany u.